மதுரை: 2001ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த ஒரு விருது விழா அது. கண்டாங்கி சேலை அணிந்து எளிமையாக மேடையேறிய அந்த பெண்ணிற்கு பிரதமர் விருது வழங்கினார். விருது வழங்கியதைக் காட்டிலும் தன்னை விட வயதில் இளையவரான அந்த பெண்ணின் காலை பிரதமர் தொட்ட புகைப்படம் தான் அடுத்த நாளில் அனைத்து நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியானது.
யார் இந்த சின்னப்பிள்ளை: அடல் பிகாரி வாஜ்பாயிடம் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் விருது பெற்ற அந்த பெண்தான் சின்னப்பிள்ளை. திட்டங்களை அரசு வகுத்துவிடலாம், அதிகாரிகளும் செயல்படுத்தலாம், ஆனால் தன் மக்களின் துயர் கண்டு செயலில் இறங்கி வழிநடத்திச் சென்ற ஒரு தலைவி உண்டு என்றால் அது சின்னப்பிள்ளைதான். மதுரை மாவட்டம் அழகர் கோயில் செல்லும் சாலையில் அப்பன் திருப்பதி (Appan Thiruppathi) அருகே அமைந்துள்ளது பில்லுசேரி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி தான் சின்னப்பிள்ளை. கிராமத்திலுள்ள பெண்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைகளுக்காக அழைத்துச் சென்று, வேலை முடிந்த பின்னர் அவர்களுக்குரிய கூலியை நில உரிமையாளர்களிடமிருந்து மொத்தமாகப் பெற்று, ஒவ்வொரு பெண்களுக்கும் பிரித்துத் தரும் கொத்துத் தலைவியாக இயங்கியவர்.
களஞ்சியம் சுயஉதவிக்குழு:இவரும் சாதாரண விவசாயக் கூலிதான். தங்களது சேமிப்புகளை எல்லாம் தனியார் நிதி நிறுவனங்களில் சேமித்து, அவர்கள் ஒருநாள் சுருட்டிக் கொண்டு ஓடியதால் ஏமாற்றமடைந்த வெள்ளந்தி மனிதர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளார். அச்சமயத்தில் தான் இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக வந்து சேர்ந்த களஞ்சியம் என்ற சுய உதவிக்குழுக்களுக்கான அமைப்பால் ஈர்க்கப்பட்டார். தன்னைப்போலுள்ள ஏழை, எளிய, அடித்தட்டுப் பெண்களை எல்லாம் சிறு சிறு குழுவாக இயங்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு களஞ்சியம் என்ற அமைப்பு பெரும் விருட்சமாக வளரக் காரணமாக இருந்தார்.
ஸ்த்ரீ சக்தி புரஷ்கார்:அதன் பின் வறுமை, கந்துவட்டி உள்ளிட்ட சமூகக் கொடுமைகளிலிருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வரத் தொடங்கினர். எந்த சுயநலமும் இன்றி தன் சுற்றத்தாரும், மக்களும் படும் துயர்துடைக்க களமிறங்கிய துணிச்சல் தான், நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் பிரதமரை, இந்த எளிய தாயின் காலைத் தொடச்செய்தது. அந்த விழாவில் பேசிய வாஜ்பாயி, “சின்னப்பிள்ளையிடம் மகா சக்தியைக் கண்டேன்” என்ற போது தான், சுயஉதவிக்குழுக்களின் மகத்தான ஆற்றல் என்னவென்பதை உலகம் உணரத் தொடங்கியது.
பத்ம ஸ்ரீ விருது:அதற்குப் பிறகு அதே ஆண்டில் அதே மாதத்தில் மும்பையில் பஜாஜ் நிறுவனம் சின்னப்பிள்ளைக்கு ‘பஜாஜ் ஜானகிதேவி புரஷ்கார் விருது’ வழங்கியது. தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சின்னப்பிள்ளைக்கு பொங்கல் திருநாளில் பொற்கிழி வழங்கிப் பாராட்டினார். இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2018-ஆம் ஆண்டு ஔவையார் விருது வழங்கி கௌரவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சின்னப்பிள்ளைக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி சிறப்புச் செய்தார்.
சமூகப் பணி:பல்வேறு விருதுகள் வந்த வண்ணம் இருந்தாலும், தன்னுடைய களஞ்சியம் இயக்கத்தின் மேலுள்ள பற்றுதல் காரணமாக, அதன் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்த வண்ணம் உள்ளார். அவ்வமைப்பு விரிந்து பரவியுள்ள ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு ஏழை மக்களுக்காக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
வறுமை, கந்து வட்டி, வரதட்சணை, மது போதை உள்ளிட்ட பல்வேறு சமூகத்தளைகளால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள பல லட்சம் ஏழைப் பெண்களை மீட்டு, அவர்களை மாபெரும் சக்தியாய் மாற்ற வேண்டும் என்ற கனவோடு இயங்கி வரும் சின்னப்பிள்ளைக்கு தற்போது 72 வயதாகிறது. ஆனாலும் கூட, ஒரு போதும் சோர்வுறாமல் சமூகப் பணி ஆற்றி வருகிறார். கடந்த 2001-ஆம் ஆண்டு ஸ்த்ரீ சக்தி விருதுக்குப் பிறகுதான், இவரது பில்லுசேரி கிராமத்திற்கு சாலை வசதியும், பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டன.
சொந்த வீடு இல்லை: இந்நிலையில், தனது குடியிருப்புப் பகுதியில் இருந்த பல்வேறு குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கும், அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அச்சிறிய கிராமத்திற்கு வருவதற்கு சின்னப்பிள்ளையே முன்னின்று முயற்சி மேற்கொண்டார். தற்போது விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் தனது மூத்த மகன் சின்னத்தம்பியின் வீட்டில் ஒண்டுக் குடித்தனமாக தற்போது வாழ்ந்து வரும் சின்னப்பிள்ளைக்கென்று இதுவரை சொந்த வீடு இல்லை என்பதுதான் மிகுந்த வியப்புக்கும், வேதனைக்கும் உரியது.