தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்து வரி கட்டாத வணிக நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைக்க முடியுமா? உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவு!

சொத்து வரி செலுத்ததற்காக நிறுவனங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சிகளுக்கு உரிமை கிடையாது. மதுரை மாநகராட்சி மாலை 6 மணிக்குள் தனியார் நிறுவனத்தின் சீலை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை கிளை உயர்நீதிமன்றம்
மதுரை கிளை உயர்நீதிமன்றம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

மதுரை:சொத்து வரி செலுத்ததற்காக வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சிகளுக்கு உரிமை கிடையாது. மதுரை மாநகராட்சி மாலை 6 மணிக்குள் தனியார் நிறுவனத்தின் சீலை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரையைசேர்ந்த பழனியப்பன் என்பவர் அவசர வழக்காக தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களுக்கு சொந்தமான பெயின்ட் நிறுவனம் ஒன்றை மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. 2023 நிதியாண்டு வரை எங்கள் நிறுவனத்திற்கான சொத்து வரி மதுரை மாநகராட்சியில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளாஸ்டிக் சீட் கொண்ட தற்காலிக கட்டுமானத்திற்கும், சென்ற நிதி ஆண்டிற்கும் தற்போதைய நிதியாண்டிற்கும் சேர்த்து ரூ.20 இலட்சம் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு எங்களது நிறுவனம் தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பதிலை ஏற்றுக்கொள்ளாமல் மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல உதவி ஆணையர் நேற்று (நவம்பர் 6 )காலை 7 மணிக்கு வந்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து விட்டு சென்று விட்டார். மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. மாநகராட்சியின் நடவடிக்கையை தடை செய்து எங்கள் நிறுவனத்தின் சீலை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவின் மீது நீதிபதி குமரேஷ் பாபு உடனடியாக விசாரணை மற்கொண்டார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், "சொத்து வரி செலுத்தவில்லை என்பதற்காக நிறுவனங்களை பூட்டி சீல் வைக்க மாநகராட்சிக்கு உரிமை கிடையாது. இது சட்டவிரோத செயல், எனவே உடனடியாக சீல் அகற்ற உத்தரவிட வேண்டும்,"என வாதிட்டார்.

இதையும் படிங்க:" 'கூல் லிப்' சாப்பிட்டால் இளமையாக இருக்கலா?" - விளம்பரம் குறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தி!

இதனைத் தொடர்ந்து நீதிபதி, "தமிழ்நாடு நகர்ப்புற சட்டத்தில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பின், குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றம் மூலமே சொத்து வரியை வசூல் செய்ய முடியும் இவ்வாறுதான் சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், கட்டிடத்தை பூட்டி சீல் வைக்க மதுரை மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. எனவே மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சரியில்லை," என அதிருப்தியை பதிவு செய்தார். மேலும் இன்று மாலை 6 மணிக்குள் வைக்கப்பட்ட சீலை அகற்றிட உத்தரவிட்டு, மனுதாரரை சொத்து வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சென்று உரிய தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details