மதுரை: தென்காசியைச் சேர்ந்த காஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தொடர்பான என் மீது பதியப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கிறேன்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், "மனுதாரர் இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவர் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜாமீன் பெறக்கூடிய பிரிவுதான். அதோடு மனுதாரருக்கும், புகார்தாரருக்கும் இடையே முன்விரோதம் உள்ள நிலையில், அதன் காரணமாகவே இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.