மதுரை:தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேனி மாவட்டம், அல்லிநகரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக கல்குவாரி நடத்தி, அரசு அனுமதி அளித்துள்ள அளவை விட, விதிமுறைகளையும் பின்பற்றாமல் அளவுக்கு அதிகமாக சுமார் 32,000 யூனிட் அளவிலான உடைகற்கள் மற்றும் மண் எடுத்துள்ளனர்.
இதனால் தமிழ்நாடு அரசுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாறைகளை உடைப்பதற்காக நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தி உள்ளதால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமவாசிகள் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோத குவாரி நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:சென்னை மாமன்ற கூட்டம்; அம்மா உணவகங்களுக்கு நிதி ஒதுக்கீடு, தனியார் டெண்டர் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றம்!
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோத குவாரி நடைபெறுவதால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அதற்கான ஆவணங்களை நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, சட்ட விரோத குவாரி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது.