மதுரை:தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன வழக்கு நிலுவையில் உள்ளதால், இருவரையும் ஓய்வு பெற அரசு அனுமதிக்கவில்லை. மேலும் அவர்களுக்குரிய எந்தவித பணப்பலன்களும் கிடைக்கவில்லை.
இதனால் தங்களை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி சசிகலா ராணி, கலைச்செல்வி இருவரும் தனித்தனியே உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தஞ்சை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனுக்கள் இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் தரப்பில், “தமிழ்நாடு முழுவதும் இதுவரை 140 பள்ளிகளில் லேப்டாப் திருடு போனதாக புகார் கொடுக்கப்பட்டு காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தஞ்சாவூரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் திருடிய நபர்கள் கண்டறியப்படவில்லை. எனினும் வழக்கு முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், 59 தலைமையாசிரியர்கள் மீதான புகாரில் அவர்களே பணம் செலுத்தி உள்ளதாக” வாதிடப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து வருகிறது.
ஆனால், மடிக்கணினி திருட்டு என்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவற்றை செயல்படுத்துவதில் நீதிமன்றம் குறுக்கிடாது.