மதுரை:ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "மதுரை ஒத்தக்கடை, யானைமலை பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி 7 பேர் போதையில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக, பணி முடிந்து வீடு திரும்பிய கான்முகமது என்பவரை தாக்கியுள்ளனர். இதில் கான்முகமது படுகாயமடைந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல் துறையினர் ஒத்துழைப்புடன்தான் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருதில்லை.
எனவே, இப்பகுதியில் உள்ள நீலமேக நகர், ஐயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். மது மற்றும் கஞ்சாபோதையில் ரகளையில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய சிறப்புப் பிரிவை உருவாக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “ஒத்தக்கடை பகுதியில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்கள் கஞ்சாவை பயன்படுத்தவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், காவல்துறையினரின் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கும்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது?
எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர். மேலும், மதுரை ஒத்தக்கடை வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 100 MBPS வேகத்தில் இணையதள வசதி! - Internet In TN Govt Schools