மதுரை:திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம், பூம்புகார் கப்பல் கழகத்திற்கு கடந்த1984 ஆம் ஆண்டு வாடகைக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையில், வாடகை பாக்கியாக ரூ.3 கோடி தற்போது வரை செலுத்தப்படாமல் உள்ளது. எனவே, நிலுவைப் பாக்கியை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர், பூம்புகார் கப்பல் கழக வாடகைப் பாக்கியை அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரிடம் வசூலிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க, கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை கப்பல் நிறுவனத்திடமிருந்து வாடகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதாகிருஷ்ணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (பிப்.3) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்புராஜ், 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியைத் தருவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உரிய கால அவகாசம் வழங்கும் பட்சத்தில்ம் வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அப்போது, வாடகை பாக்கியை வசூல் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன? 3 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வைக்கும் வரை அறநிலையத்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததா, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் சாதாரண ஏழை, வியாபாரி இருந்து வாடகை செலுத்தாவிட்டால் அவர்களை ஆக்கிரமிப்பாளர் என வெளியேற்றுவதற்குத் தீவிரம் காட்டும் அதிகாரிகள், பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேட்டார்.