மதுரை: மதுரையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “முதுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலும், பெரியார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் யானைகள் வாழ்ந்து வருகின்றன.
யானைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், சமீப காலமாக தமிழகத்தில் யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. 2008ஆம் ஆண்டில் 84 யானைகள் உயிரிழந்த நிலையில், 2019-ல் 108 யானைகள் உயிரிழந்துள்ளன. இது தமிழக வனத்துறையால் கொடுக்கப்பட்ட கணக்கு. கணக்கில் வராத யானை இறப்புகளும் உள்ளன.
யானைகளின் வலசைப்பாதைகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் கட்டிடங்கள் கட்டப்படுவது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தாழ்வாகச் செல்லும் உயர் மின்னழுத்தக் கம்பிகள் உரசி யானைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கடந்த மே 5ஆம் தேதி கன்னிவாடி, தோனிமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் "குட்டை கொம்பன்" எனும் யானை உயர் அழுத்த மின்வயர் உரசியதில் உயிரிழந்தது.
மே 7ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தனபள்ளி எனும் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இதே போல உயிரிழந்தது. யானைகளின் வழித்தடங்களில் உயர் மின்னழுத்த வயர்கள் செல்வதைத் தடுக்க வேண்டும். அவர் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை அதிக உயரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆனால், அதில் அரசு அலட்சியப் போக்குடனேயே செயல்பட்டு வருகிறது. ஆகவே, யானை மற்றும் வன விலங்குகளுக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் போதுமான அளவு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும். தோனிமலை பகுதியில் உயர் அழுத்த மின்வயர் உரசியதில் உயிரிழந்த "குட்டை கொம்பன்" யானையின் மரணம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
யானைகள் வழித்தடங்களில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜயகுமார், அருள்முருகன் அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:30 அடி கிணற்றுக்குள் விழுந்த குட்டியானை.. 6 மணி நேரமாக போராடி மீட்ட வனத்துறையினர்! - GUDALUR ELEPHANT RESCUE