மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிமலை சுந்தர விமலநாதன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் மாற்றுத்திறனாளி. என் போன்ற மாற்றுத்திறனாளிகள் ரயிலில் முன்பதிவு செய்தால் மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவச் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல, டிக்கெட் பரிசோதனையின் போதும் அதனைக் காண்பிக்க வேண்டும்.
இதே போல், தமிழ்நாட்டின் பேருந்துகளில் பயணம் செய்யும்போது மாற்றுத்திறனாளி ஆணையத்தால் வழங்கப்பட்ட பாஸ்புத்தகம், மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றைக் காண்பிப்பதோடு, அதன் இரு நகல்களையும் நடத்துநரிடம் வழங்க வேண்டும்.
இதனால் மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக, பார்வை மாற்றத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே, மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக நடவடிக்கை கோரிய நிலையில் எந்த நடவடிக்கை இல்லை. ஆகவே, மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் அடையாள அட்டை வழங்குவதோடு, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் இட ஒதுக்கீட்டைப் பெற அதையே அடையாள அட்டையாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், அருள் ஆனந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முறையாக வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய, மாநில அரசு தனித்தனி அடையாள அட்டைகளைக் கையாளுவதில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிரமம் உள்ளது. இவை அனைத்தையும் ஒன்றிணைந்து, ஒரே அடையாள அட்டையாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் விபத்தில் உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளர்; 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை! - Women Inspector Accident Death