திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜோகர் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மலைகளின் இளவரசி என கொடைகானல் அழைக்கப்படுகிறது. வருடம் முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டினரும் அதிகளவில் கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா வருகின்றனர். இந்த சுற்றுலா மூலம் கொடைக்கானலுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது.
ஆனால், கொடைக்கானலில் நகராட்சி அனுமதியின்றி, பல்வேறு பகுதிகளில் அனுமதியற்ற கட்டிடங்கள், கடைகள், வணிக வளாகங்கள், சாலையோரக் கடைகள், உணவகங்கள் கட்டப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
கொடைக்கானலில் அனுமதியின்றி சாலையோரக் கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்படுவதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. கொடைக்கானலின் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் பகுதிகளில் எந்த ஒரு அனுமதியுமின்றி, வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் கூட கடைகள், உணவகங்கள் நடத்தப்படுகின்றன.
மேலும், கொடைக்கானலில் புல்வெளி பகுதியில் இயற்கையான நீருற்று உருவாகி, 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து வெள்ளக்காவி கிராமத்திற்கு செல்கிறது. இதனை மலைவாழ் மக்கள், பொதுமக்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அனுமதியற்ற கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், கொடைக்கானலின் இயற்கை நீருற்றுகள் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, எந்த அனுமதியும் இல்லாமல், சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்பை துண்டித்து கடைகளை அப்புறப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, வனத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!