மதுரை: திருச்சியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. ராமநாதசுவாமி கோயிலில் உள்ள பழமையான சுவாமி சிலைகள், சிற்பங்கள், தூண்கள் போன்றவை மிகவும் பிரசித்தி பெற்றவை.
இதில் 3ஆம் பிரகாரம் கூடுதல் சிறப்பானது. இந்த பிரகாரத்தை உலகின் தொன்மையான சின்னங்களில் சேர்க்கக் கோரி பல்வேறு கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீ ராமநாத சுவாமி கோயிலின் இணை ஆணையர், அரிதான சிற்பங்கள், தூண்கள், ஓவியங்கள் போன்றவற்றை எவ்வித அறிவியல் முறையையும் பின்பற்றி பாதுகாக்காமல் கோயில் புனரமைப்புப் பணிகளை செய்து வருகிறார்.
கட்டைகளையும், கம்பிகளையும் பொருத்துவதற்காக சுத்தியல், உளி போன்ற கூர்மையான ஆயுதங்களால் தூண்களையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி வருகின்றனர். பழமையான சிற்பங்கள், தூண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. ஆகவே, ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலின் பழமையான சிற்பங்கள், தூண்கள், ஓவியங்களை சேதப்படுத்தாத வகையில் பாதுகாக்கவும், அதுவரை கோயிலின் பணிகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமநாதசுவாமி கோயிலின் இணை ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கீழ் மதுரை ரயில் நிலையத்தில் புதிய வசதிகள் அறிமுகம்: பயணிகள் வரவேற்பு