மதுரை: மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிக்காக உரிமம் வழங்கப்பட்ட மணல் குவாரியில் நடைபெற்ற விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சேவுகன், பாரதிராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், "மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பழையனேந்தல் கண்மாய், செட்டிகுளம் கிராமத்திற்கு உள்பட்ட கள்ளத்தி கண்மாய் ஆகிய நீர்நிலைப் பகுதிகளிலும், கொட்டகுடி கிராமத்துக்கு உள்பட்ட நிலங்களிலும், பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைக்கப்பட்டு மண் அள்ளப்படுகிறது.
இதனால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்குச் செல்லும் சூழலும், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது சுற்றுப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக அதிக அளவில் மணல் திருடப்பட்டு வருவதால், அரசுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் குவாரி அமைத்து மண் அள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, அதனை விசாரணை செய்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், "இந்த வழக்கை கடந்த அக்டோபர் 2023-இல் விசாரித்து, குவாரி நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தோம். கனிமவளத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு இருந்தோம்.