மதுரை:சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் சிபிஐ போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க, கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.