மதுரை: நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தமீம் சிந்தா மதார் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் 10 நாள் மொஹரம் திருவிழாவை முன்னிட்டு, முதல் நாள் கொடியேற்றத்தின் போதும், ஏழாவது மற்றும் எட்டு நாட்களில் சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது மேள தாளத்துடன் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதி சுவாமி நாதன் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் புனிதர்கள் ஹசன் மற்றும் ஹுசைன் நினைவாக தர்கா உள்ளது. இது ஏர்வாடி தர்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த மசூதியைத் தவிர ஊரில் ஆறு பள்ளிவாசல்கள் உள்ளன. அவர்களில் தவ்ஹீத் ஜமாத் கொள்கையை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
இஸ்லாம் அதன் தூய மற்றும் அசல் வடிவத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தவ்ஹீத் குழுவினர் நிலைப்பாடு, எனவே சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது டிரம்ஸ் அடித்து செல்ல கூடாது என்பது இவர்கள் முடிவு செய்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஊர்வலம் நடத்த எதிர்ப்பு கிளம்பியதை கருத்தில் கொண்டு, தர்கா நிர்வாகத்தால் அவர்களின் திருவிழாவை பாரம்பரிய முறையில் நடத்த முடியவில்லை.
எனவே, இசையுடன் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் பிரிவு 19 அவர்களுக்கு இந்த உத்தரவாதத்தை வழங்குகிறது. மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை தவிர்க்க முடியாது. கருத்துக்கள் மாறுபடலாம். அதனால்தான், பல்வேறு தத்துவ சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான கிளாசிக்கல் இசைக்கலைஞர்கள் அதே நேரத்தில் பக்தியுள்ள முஸ்லிம்களாக உள்ளனர்.