கோயம்புத்தூர்:ரயிலில் மோதி யானைகள் மரணம் என்ற செய்தியை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த அசம்பாவித சம்பவங்களை நாங்கள் குறைத்து விட்டோம் என்கின்றனர் தமிழ்நாடு வனத்துறையினர். கடந்த அக்டோபர் 2023ல் ஏஐ கேமரா மூலம் யானைகளை பாதுகாக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் ஓராண்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பாதுகாக்கப்பட்டதாக கூறுகின்றனர் வனத்துறை பணியாளர்கள்.
யானைகள் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு கேமரா முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கோவை வழியாக நாள்தோறும் சுமார் 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் பயணிக்கின்றன. இதில் டிராக் பி வழித்தடத்தில் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள 2.8 கி.மீ. தூரம் கொண்ட ரயில்பாதை தான் யானைகளும் ரயில்களும் சந்திக்கும் ஹாட்ஸ்பாட். இந்த பதற்றம் மிகுந்த ஆபத்தான பகுதியை நோக்கி பயணித்த அனுபவத்தை அவருடைய பார்வையில் எழுதுகிறார் ஈடிவி பாரத்தின் செய்தியாளர் ஸ்ரீனிவாசன்.
நவம்பர் 20ம் தேதி கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள கட்டுப்பாட்டறைக்கு சென்றோம். வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள 10 க்கு 20 அளவு உள்ள அந்த கட்டுப்பாட்டறை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த அலாரம் ஒலிக்க அங்கிருந்த கண்காணிப்பாளர்கள் வாக்கிடாக்கி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். பரபரப்பான பணிக்கு நடுவே நம்மிடம் பேசிய அஜித் என்ற பணியாளர், கண்காணிப்பு ஏ.ஐ. கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து விளக்கினார். எங்கள் கையிலிருக்கும் ஜாய்ஸ்டிக் மூலம் 360 டிகிரிக்கு கேமராக்களை திருப்பி யானைகள் மற்றும் இதர வன விலங்குகள் ரயில்வே டிராக்கை நெருங்குவதை கண்காணிக்க முடியும் என்கிறார் அஜித்.
இந்த கட்டுப்பாட்டறையில் 4 பேர் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான அஜித், பொறியியல் படித்துள்ள தமக்கு இந்த பணி மனநிறைவைத் தருவதாகக் கூறினார். பழங்குடியினரைப் பொறுத்தவரையிலும் யானைகளை நாங்கள் எங்கள் வாழ்வின் அங்கமாகப் பார்க்கிறோம். அவற்றை பாதுகாக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அஜித்.
பேசிக் கொண்டிருந்த போதே மீண்டும் அலாரம் அடித்தது. சின்னாம்பதி ரயில்வே கேட் அருகே ஒற்றைக் கொம்புடைய யானை ரயில்வே கேட் அருகே நிற்பதாக வாக்கிடாக்கியில் தகவல் அளித்தார் அஜித். ஆர்வம் அதிகரிக்கவே, அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் உதவியோடு, யானை நிற்கும் அந்த சின்னாம்பதி நோக்கி பயணித்தோம்.
ரயில்வே கேட் அருகில் மதுக்கரை வனக்காப்பாளர் சதீஷ் வர்மா நம்மை வரவேற்றார். இருள் சூழ்ந்த அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு ரயில்வே டிராக்கில் நடக்கத் தொடங்கினோம். பாம்புகளும், தேள்களும் அதிகம் உலவும் பகுதி என்பதால் காலை நோக்கி டார்ச் அடித்தவாரே நடக்குமாறு அறிவுறுத்தினார் வனக்காப்பாளர் . ரயில்வே தண்டவாளம் அருகே ஒற்றை கொம்பு யானை கோரைப்புற்களை அசைபோட்டபடி நின்றது. இதனைப் பார்த்ததும் என் மனதில் இதே பகுதியில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி இரவு ரயில் மோதியதில் மூன்று யானைகள் உடல் சிதறி பலியான கோர காட்சிகள் கண் முன் வந்து சென்றன.