சென்னை:சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தொழில் முனைவோர் பிரிவு சார்பில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில் 9வது ஆண்டாக தொழில் முனைவோர் உச்சி மாநாடு நேற்று (மார்ச் 7) முதல் வருகிற 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளையோர் மாநாடு, கண்டுபிடிப்பாளர்களின் மாநாடு, வை பிசினஸ் வழங்கும் ஸ்டார்ட் அப் மாநாடு உள்ளிட்ட மாநாடுகளை கொண்ட இ - உச்சி மாநாட்டில் 50க்கும் அதிகமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
ஐஎஸ்ஓ, ஸ்டார்ட் அப் இந்தியா, யுனெஸ்கோ சான்றிதழ்களை பெற்றுள்ள மாணவர்களால் நடத்தப்படும் இந்த தொழில் முனைவோர் சந்திப்பு இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறுகிறது. அனைவரும் இலவசமாக பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், 50-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், இந்தியா முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சார்ந்த 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், நூறு புத்தாக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பங்கேற்க உள்ள பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளன. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும் போது, “சென்னை ஐஐடி மேற்கொண்டு வரும் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலமாக வருடத்திற்கு ஒரு சிறந்த கண்டுபிடிப்பு உருவாகும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தாண்டில், 366 காப்புரிமை கிடைத்துள்ள நிலையில், அடுத்தாண்டு இது இன்னும் இரட்டிப்பாகும். தொழில்முனைவோராக விரும்புவோரின் யோசனைகளை செயலாக்கி அவரை தொழில்முனைவோர் ஆக்குவது வரை அனைத்தும் இந்த வளாகத்திலேயே உள்ளது. பள்ளி அளவில் மாணவர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற அறிவுறுத்துகிறோம். எல்லாருக்கும் வாய்ப்பு வழங்கும் நிலையில், ஐஐடி ரிசர்ச் பார்க்கில் பெரும்பாலும் மற்ற கல்லூரி மாணவர்கள் தான்.