சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. தென்கொரிய நிறுவனமான இதில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிறுவனத்தில், நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனம், குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை அதிக வேலை வாங்குவதாகவும், நடைமுறை சாத்தியமில்லாத இலக்கினை நிர்ணயித்து பல மணி நேரங்கள் கூடுதலாக வேலை வாங்குவதாகவும், தங்களின் பிரச்சனைகளை களைவதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியை தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிஐடியு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு, சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையோ சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது என்றும், தமிழ்நாடு அரசு அந்நிய நாட்டு சாம்சங் நிர்வாகத்திற்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர்.