தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீடு விவகாரம்; தனிநீதிபதியின் உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

Guide valuation for properties: தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கை செல்லாது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 10:19 PM IST

சென்னை:தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க, பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில், மாநில அளவிலான மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. பின், 2017ஆம் ஆண்டு 33 சதவீகிதம் வழிகாட்டி மதிப்பீடு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதால், வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக் குழு, வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட 2012ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என அறிவித்து, 2023 மார்ச் 3ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வு செய்து, பொதுமக்கள் கருத்துகளைப் பெற்று, அதன் பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சட்ட விதிகளை பின்பற்றி வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் வரை, கடந்த 2017ஆம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பீட்டையே பின்பற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 2023 மார்ச்-க்குப் பின், இதுவரை பதிவு செய்த ஆவணங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்படுவதாகவும், தொடர்ந்து 2023 மார்ச் சுற்றறிக்கையின் அடிப்படையில், முத்திரைத்தாள் கட்டணத்தை திருப்பி அளிக்கும்படி எவரும் கோர முடியாது எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா தகுதி நீக்கத்திற்கு அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details