சென்னை:கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தாது மணல் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பிட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வாதத்தின்போது நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜராகி, அரசுத் ஆவணங்கள் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை மூன்று விரிவான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை மத்திய மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தாது மணல் அள்ள விதிக்கப்பட்ட தடை மற்றும் விசாரணை அறிக்கைகள், சட்டவிரோத கடத்தல் என அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!