சென்னை: அதிமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 1886ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் மெட்ராஸ் அப்காரி சட்டத்தின் கீழ் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. வெளிநாட்டு மதுபானங்களை ஊக்குவிக்க அமல்படுத்தப்பட்டாலும், முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
அதிமுக மனு: 1937ம் ஆண்டு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ராஜகோபாலாச்சாரியால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் 1948ல் ஒருங்கிணைந்த தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு தொடர்ந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, 1971ல் மதுவை அனுமதித்தார். பட்டைசாராயம் மற்றும் கள் ஆகியவற்றை விற்க அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் 1974ல் பட்டைசாராயம் மற்றும் கள் விற்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 2023ல் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். தற்போது 37 பேர் உயிரிழந்துள்ள கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், அதிகாரிகள் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போவதாக தெரிவிக்கிறார். ஆனால், மாவட்ட ஆட்சியர் (இடமாற்றம் செய்வதற்கு முன்பு) உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணமில்லை என முரண்பாடாக தெரிவித்தார். அதனால், நீதிமன்றம் நேர்மையாக பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும், உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணையும், எதிர்காலத்தில் தவறுகள் நடக்காமல் தடுக்க சிறப்பு துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குழாயில் தண்ணீர் திறந்து விடுவது போல கள்ளச்சாராயம்: இந்த மனு இன்று (ஜூன் 21) நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம், '' தமிழக அரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டது. இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், பொதுமக்களும் கள்ளச்சாராயத்தை தடுத்த புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. குழாயில் தண்ணீர் திறந்து விடுவது போல கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளது. அரசியல் அதிகாரிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் பணம் கைமாறியுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.
மேலும், '' கடந்த 2023 மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளச்சாரயம் புழக்கத்தை தடுக்க கவன ஈர்ப்பு நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். ஆனால், ஓராண்டாக நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2023ல் மரக்காணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டபோது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அப்போது முதல் அரசு எந்த நடவடிக்கையைம் எடுக்காமல் அமைதியாக உள்ளது. சிபிசிஐடி வழக்கை விசாரிப்பது எந்த முன்னேற்றமும் ஏற்படாது'' என தெரிவித்தார்.
12 பேர் அபாயகட்டம்: இதையடுத்து அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், '' தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக 47 பேர் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு விழுப்புரம், சேலம், ஜிப்மர், கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் 165 பேர் சிகிச்சைக்காக அனுமிதிக்கப்பட்டுள்ளனர். அதில், 80 பேர் தற்போது அபாயகட்டத்தை தாண்டியுள்ளனர். 12 பேர் அபாயகட்டத்தில் உள்ளனர். 162 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துமனையில் மட்டும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்'' என தெரிவித்தார்.
அத்துடன், '' இதுவரை 16 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் உற்பத்தி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மெத்தனால் கலந்ததாக கோவிந்தராஜ் என்பரும், அவரின் விஜயா, தாமோதரன் மற்றும் மதன் கைது செய்யப்பட்டனர். நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
அந்த உயர்மட்ட அதிகாரி யார்?:இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பவம் நடந்ததற்கான காரணம் என்ன? மரக்காணம் சம்பவத்திற்கு பின் ஒரு ஆண்டுக்கு பிறகும் இச்சம்பவங்கள் தொடர காரணம் என்ன? உயிரிழப்புக்கு பின் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கேட்கவில்லை. ஏன் நடைபெறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க கடந்த ஒரு ஆண்டாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. கள்ளச்சராயத்தை தடுக்க யார் தவறியது? அந்த உயர்மட்ட அதிகாரி யார்? ஒரு ஆண்டாக என்ன செய்யப்பட்டது என விளக்கமளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.
மேலும், கடந்த ஒரு ஆண்டாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக அரசு எடுத்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 26ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:'மரணங்கள் நிகழலாம்'.. கள்ளச்சாராய இறப்புகளை முன்பே கணித்து விஆர்எஸ் வாங்கினாரா எஸ்பி மோகன்ராஜ்?