தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில அபகரிப்பு விவகாரங்களில் போலீசாரை நீதிமன்றம் கண்காணிக்கும் நேரம் வந்துவிட்டது.. உயர் நீதிமன்றம் காட்டம்! - MHC ON LAND GRABBING CASE - MHC ON LAND GRABBING CASE

Court on Land grabbing case: தமிழகத்தில் அரசியல்வாதிகளின் துணையுடன் ரவுடிகளால் நிகழும் நில அபகரிப்பு தொடர்பான வன்முறைச் சம்பவங்களை காவல்துறையினர் எப்படி விசாரிக்கின்றனர் என கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயிர்நீதிமன்றம் (கோப்புப் படம்)
சென்னை உயிர்நீதிமன்றம் (கோப்புப் படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 10:53 PM IST

சென்னை:தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதுடன், மிரட்டல்கள் விடுக்கப்படுவதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, இந்த விவகாரத்தி்ல் முழுக்க முழுக்க போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலம் கார்த்திக்கிற்குச் சொந்தமானது என்பதற்கான அனைத்து முகாந்திரம் இருப்பது தெரிந்தும், போலீசார் கண்களை மூடிக்கொண்டு நிலத்தை அபகரிக்க உதவியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ரவுடிகளுடன் போலீசார் கைகோர்த்துக் கொண்டு உண்மையான நில உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உயர் நீதிமன்றத்துக்கு வழக்குகள் வருவது அதிகரித்துள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளும் இதுபோன்ற நிலமோசடி வழக்குகளில் சம்பந்தப்படுவது போன்ற விவகாரங்கள் இந்த வழக்குகளை மேலும் மோசமாக்குகிறது.

இதுபோன்ற வழக்குகளில் வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையாகவும் விருப்பு வெறுப்பின்றி விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருவது குறித்து நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலைமை தொடர்ந்தால், அப்பாவி பொதுமக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குலைந்து விடும் எனவும், இது நில மாஃபியாக்களையும், ரவுடிகளையும் ஊக்குவிப்பது போலாகி விடும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் மவுனம் காக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழ்ந்த நில அபகரிப்பு தொடர்பான கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, கார்த்திக் அளித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய நீதிபதி, சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:சேலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக திமுக பிரமுகரைத் தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details