சென்னை:சென்னைக்கு அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றுத் தருவதாக 88.66 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடைக்கோரி அக்கல்லூரியின் நிறுவனர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் மற்றும் மருத்துவ கல்லூரி நிறுவனர் உள்ளிட்டோர் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக 88.66 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப் பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மோசடி செய்த தொகையை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, மாணவர்களிடம் பெற்ற தொகையை மருத்துவ கல்லூரி நிறுவனர் திரும்ப அளித்ததை அடுத்து அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜாரகுமாறு நிறுவனர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு தடைக் கோரி நிறுவனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.