சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (NCC) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது மாணவி ஒருவரை அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சிவராமனை கைது செய்தனர். இதனை அடுத்து மருத்துவமனையில் இருந்தபோது சிவராமன் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் தந்தையும் அன்றே வாகன விபத்தில் உயரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், "காவல்துறை நிலை அறிக்கையில் சரியான விசாரணை நடத்தவில்லை என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்காமல், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோரிடம் குடும்ப பின்புலங்களை காவல்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி, அரசுத் தரப்பில் சிவராமன் மட்டும் தான் இதற்கு காரணம் என்று வழக்கை திசை திருப்ப முயல்கிறது" என குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என பள்ளி நிர்வாகம் மாணவிகளை மிரட்டியுள்ளது. ஆகஸ்ட் 17 அன்று கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையிலேயே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததுள்ளனர். மாலை 3 மணியளவில் 7 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
சிவராமன் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததால், ஏற்கனவே கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கைதுக்குப் பின் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிவராமன் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். சிவராமனின் உயிரிழப்புக்கான மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். சிவராமனின் தந்தை அதிகமாக மது அருந்தியதால் வாகனத்தில் சென்றபோது விபத்தில் உயிரிழந்துள்ளார். இரு சம்பவங்களிலும் எந்த மறைவும் இல்லை.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதி இல்லாமல் முகாம்கள் நடத்தக் கூடாது என உடனடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. எந்த பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டதோ, அந்த பள்ளிகளில் சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிவராமன் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதில் 1 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.