தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“17 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு தொடர முடியுமா?” - ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கேள்வி! - Flyover scam case - FLYOVER SCAM CASE

Case against MK Stalin: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடர்பான வழக்கை திரும்பப் பெற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 17 ஆண்டுகளுக்குப் பின் வழக்கு தொடர முடியுமா என விளக்கமளிக்க, மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 7:19 PM IST

சென்னை: கடந்த 1996 - 2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் 115 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கடந்த 2001ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்ய ஒப்புதல் வழங்கி 2005ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின், 2006ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின், ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து, 2005ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது.

இந்நிலையில், வழக்கு தொடர்வதற்கான அனுமதி திரும்பப் பெற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை உரிய நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, “சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? அதுவும், 15 - 20 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா” என்பது குறித்து தீர்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு! - Anitha R Radhakrishnan

ABOUT THE AUTHOR

...view details