சென்னை: சென்னையில் மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 77.70 ஏக்கர் அரசு நிலம் 1933 மற்றும் 1935-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாண அரசால், கோல்ஃப் மைதானம் அமைப்பதற்காக, காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இதில் 1971-1996ஆம் ஆண்டின் இடையேயான காலத்திற்கு உரிய குத்தகை பணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி, 119 கோடியே 78 லட்சத்து 58 ஆயிரத்து 312 ரூபாய் குத்தகை செலுத்த வேண்டும் என்று, மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் 2004-ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2004-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2015-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதிக்குள்ளாக 25 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், குத்தகை வசூல் நடவடிக்கை தொடர்பான நோட்டீசில் உரிய விசாரணையை மேற்கொண்டு, உண்மையான குத்தகை பாக்கியை தீர்மானிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.