விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா. இவரது கணவர், மனைவிக்கு தகாத உறவு இருந்ததாக கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மனைவியிடம் மது வாங்கி வருமாறு கணவன் கூறியதாகவும், உடனே மனைவியும் மது வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த மதுவை அவரது கணவரும், நண்பரும் அருந்தியதில் சுலோச்சனா கணவர் இறந்ததாகவும், நண்பர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இறந்துபோனவரின் சகோதரர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சுலோச்சனா மற்றும் அவரது கணவர் சந்தேகப்பட்டதாக கூறப்படும் நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், சுலோச்சனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுலோச்சனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரருக்கும், அவரது கணவருக்கும் இணக்கமான உறவு இல்லை. இந்நிலையில், மனைவியிடம் மது வாங்கி வருமாறு எப்படி கூறியிருக்க முடியும்? சுலோச்சனாவுக்கும், அவரது கணவருக்கும் சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதையெல்லாம் விசாரணை நீதிமன்றம் கவனிக்காமல் ஆயுள் தண்டனை விதித்துள்ளது” என்றார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி விசாரணை நடத்தியுள்ளார். அவரிடம் சுலோச்சனா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரியவந்துள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறந்தவருடன் சேர்ந்து மது அருந்தியவரிடம் 13 நாட்கள் கழித்தே காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சுலோச்சனாவின் 2 குழந்தைகளும் சாட்சியம் அளித்துள்ளனர்.