சென்னை: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை முன் அமைந்துள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (மே 10) விசாரணைக்கு வந்தது.
அரசின் சர்வதேச மையம்: அப்போது மனுதாரர் தரப்பில், “வடலூரில் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என தனது திருமுறைகளில் வள்ளலார் தெரிவித்துள்ளார். அதனால் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது. அரசின் சர்வதேச மையம் சத்திய ஞான சபையின் அருகில் கட்டப்படுவதால், பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.
அரசுத் தரப்பில், “சத்திய ஞான சபைக்கு அருகில் சர்வதேச மையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாத போது, ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது? 2021-இல் அறங்காவலர்களை நியமிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. 36 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற கோயில்களில் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
வள்ளலாரின் பாடல் அர்த்தங்கள்: இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வள்ளலார் தனது பாடல்களில் பெருவெளி மையம் அமைக்கக் கூடாது என குறிப்பிடவில்லை. வள்ளலாரின் பாடல் அர்த்தங்கள் தவறான பொருள்களில் புரிந்து கொள்ளப்படுகிறது. வேதங்களை அவர் எதிர்க்கவில்லை. வேதங்களை திருத்தி கூறுபவர்களையே வள்ளலார் எதிர்த்தார்.
அதனால், பாடல்களை தவறாக படித்து, தவறான பொருள்களை பரப்பி வள்ளலாரின் புகழை கெடுக்க வேண்டாம். அரசு அமைக்கும் மையத்தால் சத்திய ஞான சபைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும் போது தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன? வள்ளலார் கூறிய பெருவெளியில் தற்போது 7.1 ஏக்கர் நிலம் மட்டுமே பாக்கி உள்ளது. சத்யஞான சபையைச் சுற்றி சுமார் 400 கடைகள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. பின்னர் எப்படி வள்ளலாரின் பெருவெளி நிலம் பெருவெளியாகவே உள்ளது எனக் கூற முடியும்?” என நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.
வி.ஐ.பி தரிசனம்: மேலும், “பெருவெளியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். அதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய நிலைக்கு மாற்ற உத்தரவிடப்படும். பெருவெளியில் இருக்கும் 400 ஆக்கிரமிப்புக் கடைகள் அப்புறப்படுத்த வேண்டும். வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கோயில்களில் வி.ஐ.பி தரிசனம் தடுக்கப்பட வேண்டும். கடவுள் முன் அனைவரும் சமம் என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
கண்டனம்: அத்துடன், “சத்திய ஞான சபை செயல்பட்டு வந்த 106 ஏக்கர் நிலத்தில் தற்போது 71 ஏக்கர் மட்டுமே உள்ளது. 12 கிணறுகள் அழிக்கப்பட்டுள்ளன. 1939ஆம் ஆண்டு அறநிலையத்துறை விதிகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. 1 லட்சம் ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது” என கண்டனம் தெரிவித்தனர்.
அதற்கு அரசுத் தரப்பில், ஆக்கிரமிப்புகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை. அறநிலையத்துறை அதன் கடமையைச் செய்தாலே போதும். சர்வதேச மையம் அமைக்க யார் அனுமதி வழங்கியது? அதற்கான அனுமதி கடிதத்தை சமர்பிக்க வேண்டும். அரசு கட்டிடம் என்றால் அனுமதி வாங்கக் கூடாதா? அறங்காவலர் நியமனம் தொடர்பாக ஜூன் 10ஆம் தேதி பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு! - Bail To Arvind Kejriwal