சென்னை:மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ்வரன், 'மெட்ரோ நிலையங்களில் சாய்வுதளம் அமைக்கப்பட்டதாக 2017-ல் அரசு அறிவித்தது. ஆனால், 2020-ல் வெளியிடப்பட்ட கூடுதல் அறிக்கையில் 40 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சக்கர நாற்காலிகள் இருந்தும் மாற்றுத்திறனாளிகளால் ரயில் நிலையத்தை பயன்படுத்த முடிவதில்லை' என குற்றம்சாட்டினார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 'தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படுவதால் இரவு 12.30 முதல் அதிகாலை 5.30 மணி வரை மட்டுமே சரிபார்ப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால், பணிகள் முடிக்க சில மாதங்கள் ஆகும்' எனத் தெரிவித்தார்.
மேலும், ரயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக்கப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதாக கட்டப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்ய ஏன் அறிவுறுத்தவில்லை என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: நடிகை கௌதமியின் நில மோசடி புகார்; அழகப்பனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு! - Gautami Land Issue Case