சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.7) மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமையை தேர்வு செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன.
தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்துள்ள எவரும், கட்சியில் உறுப்பினராக இல்லை. இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். கட்சியில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த ஆதரவு அப்படியே நீடிக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லை.' எனவும் குறிப்பிட்டார்.
மேலும், 'பொதுக்குழு உறுப்பினர்களும், 65 சட்டமன்ற உறுப்பினர்களில் 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ள இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'கட்சி தனக்கு சொந்தமானது என யாரும் உரிமை கூறாத நிலையில் உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய வேண்டும்.' என வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் தரப்பில், 'உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.' என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் வாதத்தை பதிவு செய்து கொண்டு மட்டுமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றனர். மேலும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியுமா?' என்றும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.' என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது நிலைமை மாறி உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது.' என குறிப்பிட்டனர்.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீதான உத்தரவை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.