தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு! - Land issue

Land issue: பட்டியலினத்தவர்கள் தொழில் துவங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழ்நாடு அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்பு புகைப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்பு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 1:44 PM IST

சென்னை:டாக்டர் அம்பேத்கர் கல்வி கூட்டமைப்பு நிர்வாக இயக்குநரும், தேசிய பட்டியல் மற்றும் பழங்குடியின கவுன்சில் தேசிய அமைப்பாளருமான கவுதம சித்தார்த்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், “ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள இங்கூர் தொழிற்பூங்காவில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பின்னலாடை தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, தாட்கோ எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகம், 150 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியது.

இதற்காக, கடந்த 1995ஆம் ஆண்டு 203 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு தாட்கோவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில், 200 கொட்டகைகள் அமைக்கப்பட்டு, சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தில் எந்த தொழில் நிறுவனங்களும் துவங்கப்படாததால் கட்டுமானங்கள் சேதமடைந்து விட்டதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த நிலத்தில் 48 ஏக்கர் நிலத்தை கடந்த 2021ம் ஆண்டு திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் எனும் சிப்காட் ஒதுக்கீடு செய்துள்ளது. எந்த பொது அறிவிப்பும் வெளியிடாமல், மூன்று தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்தது தன்னிச்சையானது.

எனவே இந்த நிலத்தில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள மூன்று தனியார் நிறுவனங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். 200 கொட்டகைகளையும் பட்டியலின, பழங்குடியின நபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க:ஒரு மாதத்தில் 2,000 போன் கால்.. ஜெயக்குமார் பயன்படுத்திய செல்போன்கள் எங்கே? கிணற்று நீரை இறைக்கும் போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details