சென்னை: சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் 10 பேரில் ஒன்பது பேர் பாதசாரிகள் என ஆய்வுகள் கூறியுள்ளதால், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல இடங்களில் தடுப்புக்களை ஏற்படுத்தியுள்ளதால் பாதசாரிகளின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல், இருசக்கரவாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதாகவும், பாதசாரிகள் பயன்பாட்டுக்கான நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரைகள் இல்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை மாநகரில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை அமைக்கக் கோரியும், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரியும் கடந்த மே 8ஆம் தேதி அரசுக்கு அனுப்பிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆஷா மற்றும் செந்தில் குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:கைது நடவடிக்கை.. பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! - FELIX GERALD BAIL DISMISSED