சென்னை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், தனது தாய்க்குச் சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கான ஆட்சேபமில்லா சான்று பெற விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது அறிக்கை அளித்து, தாசில்தாரருக்கு பரிந்துரை செய்வதற்காக 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மீது அசோக்குமார் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், வருவாய் ஆய்வாளர் நாகராஜனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையான நாகராஜன், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க:சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. ரூ.11.93 லட்சம் சிக்கியது!
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகராஜனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வதற்கு ஐந்து நாட்கள் முன், அதே குற்ற எண்ணில், அதே புலன் விசாரணை அதிகாரி வேறொரு நபருக்கு எதிராக வழக்கை பதிவு செய்துள்ளதாகக் கூறி, அந்த வழக்கு தொடர்பான முதல் அறிக்கை நாகராஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, அந்த முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கமளிக்கும்படி, திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சசிலேகாவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அந்த முதல் தகவல் அறிக்கை எப்படி பெறப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.