சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட்மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி கொண்ட மருத்துவமனையை கட்டி வருகிறது.
கட்டுமானப் பணியில் ஆழ்துழாய் அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுகிறது. அந்த பகுதியில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் வசித்து வருகின்றனர். பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்புகள் இருப்பதால், கட்டுமானப் பணிகளின் சப்தம் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நள்ளிரவைத் தாண்டி அதிகாலையும் பணிகள் நடைபெறுவதால், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு கட்டுமான சப்தத்தை குறைக்க கூறி கடிதம் அனுப்பப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஒலி மாசு ஏற்படுவதால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ, காவல்துறைக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொள்ள மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை தடை விதிக்க வைக்க வேண்டும். ஒலி மாசை கட்டுப்படுத்தாமல் விதிகள் மீறுவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (பிப்.27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுமான நிறுவனம் சார்பில், உரிய அனுமதிக்காக விண்ணப்பித்திருப்பதாகவும், விதிகளை சரியாக பின்பற்றியே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆழ்வார்பேட்டையில் இயங்கிவரும் தனியார் பள்ளி உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய அனுமதி வாங்காமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூபாய் 25 லட்சம் அபராதமும் விதித்து, மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டனர்.
பணத்திற்காக அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், ஒலி அளவுகளைக் கண்கானிக்க தவறிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அபராதத் தொகையை தவறிழைத்த அதிகாரிகளிடம் இருந்து வசூலித்துக் கொள்ளவும் உத்தரவிட்டனர். மேலும், அபராதத்தொகையை 10 நாட்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என கூறி உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 13ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "என்னை அதிமுகவில் புறக்கணிக்கின்றனர்" - நிகழ்ச்சியில் பாதியில் சென்ற முன்னாள் அமைச்சர்.. ஆரணியில் நடந்தது என்ன?