சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், விழாக்களை நடத்த தடை விதிக்கக் கோரி, கோவை செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிவஞானன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “கோவை இக்கரை, பூலுவாம்பட்டியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு அருகில் எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் செய்து வருகிறேன்.
இந்த சூழலில், எனக்குச் சொந்தமான நிலத்திற்கு அருகில் 195 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக, சிவராத்திரி போன்ற விழாக் காலங்களில் லட்சக்கணக்கான நபர்கள் அங்கு திரள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, ஈஷா யோகா மையத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாமல், கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் வெளியேற்றுகின்றனர்.
இதன் காரணமாக, கால்நடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியில் நிலத்தடி நீரும் மாசடைகின்றது. ஆகவே, கழிவு நீரை வெளியேற்றுவதற்கு முறையான வசதிகளைச் செய்யும் வரை விழாக்கள் நடத்துவதற்கும், பக்தர்கள் கூடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “விழா நடக்கும் நாட்களில் லட்சக்கணக்கான நபர்கள் வருகிறார்கள். இதனால் அப்பகுதி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. சிவராத்திரி நாட்களில் ஒலி, ஒளி மாசு காரணமாக யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், கழிவு நீரை விவசாய நிலங்களில் வெளியேற்றுவதை தடை செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக நீதிபதிகள், "மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனை அடுத்து, ஈஷா யோகா மையத்தில் இருந்து கழிவு நீர் அருகில் உள்ள நிலங்களில் வெளியேற்றப்படவில்லை என்பதை உறுதி செய்யும்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கும், ஈஷா யோகா மையத்துக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா தகுதி நீக்கத்திற்கு அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்!