சென்னை: நாடாளுமன்றத் தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மனுக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து, அப்பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பணத்தை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் ஆட்கள் 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல் ஊழியர்கள் எஸ்.சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது, இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், ஹோட்டல் ஊழியர்கள் எஸ்.சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகிய மூன்று பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காவல்துறை சம்மன் அனுப்பியது.