சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக, ஜனநாயக முறையில் நடத்துவதற்கு உரிய வழிமுறைகளை பிறப்பிக்கவும், விதிகளின்படி சங்கங்கள் இயங்கவும் உத்தரவிடக்கோரி, ஆறு வழக்கறிஞர்கள் சேர்ந்து 2015ல் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இறுதி விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் நடந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சில, பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் தேர்தலை நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தாதது, சங்க விதிகளை மீறியது மட்டுமின்றி, ஜனநாயக கொள்கைகளையும் மீறுவதாகும்.
விதிகளின்படி, சங்கங்கள் செயல்படவில்லை என்றால், அங்கீகாரத்தை ரத்து செய்ய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. வழக்கறிஞர்களோ? அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோ? சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. பார் கவுன்சில் நிர்வாகத்தில் தவறு நடந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கான இடம், நீதிமன்ற வளாகங்களில் ஒதுக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் அமைதியாக இயங்க, சங்கங்களும் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.