சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த 245 உரிமையியல் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வுப் பட்டியல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் வெளியிடப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்வுப் பட்டியலை ரத்து செய்ததுடன், உரிய இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி ஏற்கனவே தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்த 14 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 14 பேர் சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்நிலையில், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 14 பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருத்தப்பட்ட பட்டியலின் அடிப்படையில் நியமன உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது.