தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - salem periyar university suspend

Salem Periyar University Registrar Thangavel: நிதி முறைகேடு புகார் தொடர்பாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேல்
சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 7:05 PM IST

சென்னை:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது.

எனினும், பரிந்துரையை செயல்படுத்தாமல் துணைவேந்தர் ஜெகநாதன் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கம், பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேலு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, மனுதாரர் 34 வருட அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்தார். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில், சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, பணியிடை நீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். அப்போது தற்போதைய பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், இது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழுதான் முடிவெடுக்க வேண்டும் என, இந்த பரிந்துரைகள் சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:“இடமாற்றம் செய்யும் உத்தரவை அரசு ஊழியர்கள் தண்டனையாக பார்க்கக்கூடாது” - மதுரைக்கிளை அறிவுறுத்தல்!

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, முந்தைய பதிவாளர் தங்கவேலை பணியிட நீக்கம் செய்யும் பரிந்துரை மீது முடிவெடுக்காமல், ஏன் மீண்டும் அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளராக இருந்த தங்கவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக குற்ற வழக்கு உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டார். முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு தடை இல்லை எனவும், அவருக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க:திமுக இருக்காது எனக் கூறிய பலர் காணாமல் போயுள்ளனர்.. பிரதமருக்கு கனிமொழி பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details