சென்னை:2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட முருகன் என்பவரை ஆதரித்து, டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, 10 கார்கள் மற்றும் 40 இருசக்கர வாகனங்களுடன் சென்றதுடன், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி, பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, தேர்தல் விதிகளை மீறியதாக, கமுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், இந்த குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்விற்கு, ஒரு வருடம் கழித்து 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
அதனால், தன் மீது ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் டிடிவி தினகரன் மீது போடப்பட்ட தேர்தல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ராமேஸ்வரம் கஃபே யாருடையது? அப்துல் கலாமுக்கு உள்ள தொடர்பு!