சென்னை: நாடாளுமன்ற பிரச்சாரத்தின்போது, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மனை எதிர்த்து பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஏற்கனவே கோவையில் சிபிசிஐடி போலீசார் தன்னிடம் விசாரணை நடத்திய நிலையில், தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவதாகவும், தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆர் சி பால்கனகராஜ் ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது” என்று வாதிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம் என்றும், ஏற்கனவே அமைப்புச் செயலாளர் ஆஜராகி உள்ளார் என்றும் வாதிட்டார்.
தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று அவர் கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வருகிற 11ஆம் தேதி எஸ்.ஆர் சேகர் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், செல்போனை ஒப்படைக்கும்படி வலியுறுத்தக் கூடாது என சிபிசிஐடி மற்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் நிவாரணம்? - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கேள்வி