சென்னை: மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர் மட்டுமல்லாமல், அதே கடையில் உள்ள அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வதை எதிர்த்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24 ஆயிரத்து 986 ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலையில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என கூறப்பட்டுள்ளது.
காலணி ஆதிக்கத்தில் தான் இதுபோல தனிப்பட்ட நபர்களின் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக தண்டனைகள் விதிக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் தண்டனை விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதால் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பாக்கெட்டில் கை வைத்த ஓபிஎஸ்-க்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னை ஏர்போர்ட்டில் தொலைந்த செல்போன்..!
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, சட்ட விரோதமான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
டாஸ்மாக் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு நவம்பர் 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
அண்மையில், வேலூர் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து காட்பாடி மற்றும் அணைக்கட்டு வட்டங்களில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 11335 பணியாற்றி வரும் மேற்பார்வையாளர் ஜெகநாத மூர்த்தி மற்றும் விற்பனையாளர் ராஜேஷ் ஆகியோர் 10 ரூபாய் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெகநாத மூர்த்தி மற்றும் விற்பனையாளர் ராஜேஷ் ஆகியோரை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
மேலும் ஐந்து ரூபாய் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த புகாரின் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் 17 விற்பனையாளர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்