சென்னை:பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதுபோல உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், போதுமான காரணங்கள் இல்லாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் கொடுக்கப்பட்டதால் குண்டர் சட்டம் போடப்பட்டது. தனிப்பட்ட காரணங்கள் அரசுக்கு ஏதும் இல்லை. மேலும், அரசுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றம் மற்றும் அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தனிப்பட்ட காரணங்களுக்காக திறப்பதாக வீடியோ வெளியிட்டு, அவர் தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டினார் என்ற காரணத்தினால் பல்வேறு வழக்குகளும் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.