சென்னை:தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மருத்துவர்கள் எந்த விதமான விதிமீறல்களிலும் ஈடுபடுவதில்லை. மருத்துவர் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி P.B.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ அவசரத்திற்காகச் செல்லும் மருத்துவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்களிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல, மருத்துவர்களுக்கும் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திடம் கருத்து கேட்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனை அடுத்து, மருத்துவ ஆணையத்தையும் வழக்கில் இணைக்க வேண்டுமென அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தேசிய மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் இந்த வழக்கில் இணைக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
மேலும், அதுவரை வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும், மருத்துவ கவுன்சிலின் வாதத்தை கேட்ட பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
ஸ்டிக்கரை மருத்துவர்கள் தவறாக பயன்படுத்தினாலோ அல்லது மருத்துவர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் வாகனங்கள் சந்தேகிக்கும் முறையில் இருந்தாலோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், வாகனத்தின் முன்பக்கம் அல்லது பின்பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும் எனவும், நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க:ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகள்; அரக்கோணம் பாமக வேட்பாளரின் மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!