தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக அமைச்சர்கள் வழக்கு; சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..! - dmk ministers assets case - DMK MINISTERS ASSETS CASE

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத் தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 1:32 PM IST

சென்னை: கடந்த 2006-2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக முறையே 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் மற்றும் 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, 2012ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் இருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்குகளில் இருந்து இருவர் குடும்பத்தினரையும் விடுவித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றி குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து விசாரணையை நடத்தி, விரைந்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிங்க:சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் - திருமாவளவன் மகிழ்ச்சி!

இந்நிலையில், இந்த வழக்குகளில் அரசுத்தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களும் முக்கிய துறைகளை கவனித்து வருகின்றனர்.

வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, உள்துறை பொறுப்பை கவனிக்கும் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் நியாயமான விசாரணை நடைபெற நீதியின் நலனை பாதுகாக்க, புலன் விசாரணை அதிகாரியும், அரசுத்தரப்பு வழக்கறிஞரும் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும், அதனால் இரு வழக்குகளையும் நடத்த அரசுத்தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், இரு அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details