தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் ஈபிஎஸ்,சசிகலா உள்ளிட்ட 8 பேரிடம் விசாரிக்கலாம்...சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம்! - KODANAD MURDER CASE

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலா, இளவரசி, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. தீர்ப்பு குறித்த முழுவிவரம் இப்போது வெளியாகி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்ற கோப்புப்படம், சசிகலா
எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்ற கோப்புப்படம், சசிகலா (Credits - Edappadi Palaniswami X Page, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2024, 3:51 PM IST

சென்னை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலா, இளவரசி, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. தீர்ப்பு குறித்த முழுவிவரம் இப்போது வெளியாகி இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்துவிட்டு ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும் என வாதிட்டார்.மேலும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சம்பந்தமில்லாமல் முதலமைச்சருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இல்லையே என தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (டிச 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி,"குற்ற விசாரணை முறை சட்டப்படி, தங்கள் தரப்பு சாட்சி ஆதாரங்களை சமர்ப்பிக்க குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி வகித்ததால் அப்போது அவரை விசாரிக்க உத்தரவிட முடியாது என நீலகிரி நீதிமன்றம் கூறியது. ஆனால் இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இல்லை. வழக்கு தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வர அவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படும் காரணங்களில் நியாயம் உள்ளது.

விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்பதில் நியாயம் உள்ளது:கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்து ஐந்து நாட்களில், குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான சயான் கேரளாவில் விபத்தில் சிக்கி மனைவி மகளை இழந்துள்ளார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட்டில் உதவியாளராக பணியாற்றிய தினேஷ் குமார் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அசம்பாவித சம்பவங்கள், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கேட்பதில் நியாயம் உள்ளது.

இதையும் படிங்க :கோடநாடு வழக்கு; "தற்போது ஈபிஎஸ் முதல்வராக இல்லையே" - நீதிபதி கருத்து!

ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட் வரும்போது அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி அங்கு சென்றிருப்பார். பங்களா குறித்து அவருக்கு தெரிந்திருக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்பதால் நீதியின் நலன் கருதி நியாயமான விசாரணை கருதி குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.

சசிகலா, இளவரசி, போலீஸ் அதிகாரிகளையும் விசாரிக்கலாம்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்க மறுப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விசாரிப்பது தேவையற்றது என கூற முடியாது. ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட் செல்லும் போது ஐஏஎஸ் அதிகாரி சங்கர், ஐபிஎஸ் அதிகாரி முரளி ரம்பா ஆகியோர் உடன் இருந்திருப்பார்கள். கோடநாடு எஸ்டேட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். அதனால் போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும்.

மேலும், கட்சியின் அமைப்பாளர் சஜீவன் மற்றும் சுனில் ஆகியோரும் ஜெயலலிதா வரும்போது அங்கு இருந்திருப்பார்கள். அதனால் அவர்களையும் விசாரிக்க வேண்டும். ஏற்கனவே இந்த வழக்கில் மேல்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எட்டு பேரையும் எதிர் தரப்பு சாட்சிகளாக விசாரிப்பதால் விசாரணையில் தாமதம் ஏற்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. வழக்கு விசாரணையில் இருதரப்புக்கும் வாய்ப்பு வழங்கி விசாரணையை முடிக்க வேண்டும் என நீலகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மேல் விசாரணையின் அடிப்படையில் கூடுதல் சாட்சிகளை விசாரிக்க அரசு தரப்பு கேட்கும் போது, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்தபின் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், ஐ ஏ எஸ் அதிகாரி சங்கர், ஐபிஎஸ் அதிகாரி முரளிரம்பா, அதிமுகவிலர் சஜீவன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்,"என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details