சென்னை:சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (ஜூலை 5) படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க கோரி அவரது மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் பலத்த ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.16 அடி சாலை உள்ள பகுதியில் கட்சி அலுவலகம் அமைந்துள்ளதாலும், அது குடியிருப்புப் பகுதி என்பதாலும் அவரது உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் எதிர்வாதம் எடுத்து வைக்கப்பட்டது. அவசரமாக விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று பிற்பகல் 2:15 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உறவினருக்கு சொந்தமான நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான அனுமதி அளித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறி அவற்றின் நகல்களை தாக்கல் செய்தார்.
இதை பொற்கொடி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, தேவையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கட்சி அலுவலகத்தில் அவர் நினைவாக நினைவிடம் கட்டுவது அல்லது மருத்துவமனைகள் கட்டுவதற்கு அரசின் அனுமதிகளை பெற்று நடவடிக்கைகளை எடுக்கலாம் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.