தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி! - MADRAS HIGH COURT

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி சிவன் கோயிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலை கார்த்திகை மகாதீபம்
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் மற்றும் வெள்ளியங்கிரி மலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 9:32 PM IST

சென்னை: கோவை மாவட்டம், முட்டத்துவயல் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுயம்பு லிங்க கோயிலான வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 13 ஆம் தேதி முதல் மார்கழி 30ஆம் தேதி வரை மகாதீபம் மற்றும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி வனத்துறை அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டு 2024 பூஜை, தீபம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வனத்துறையிடம் விண்ணப்பித்தும் மனு பரிசீலிக்கப்படவில்லை. ஆகையால், அந்த மனுவை பரிசீலித்து எதிர்காலத்துக்கும் சேர்த்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், "கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் வரும் 2025 ஜனவரி மாதம் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் பூஜை செய்ய செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:திருகார்த்திகை தீபத்திருவிழா; கிரிவலப்பாதை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட காவல் துறை!

மேலும், "ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, விலங்குகளை வேட்டையாடக் கூடாது, வன விலங்குகளுக்கு தீங்கு இழைக்கக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகளை விதித்து மாவட்ட வன அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்" என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், "காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அந்த நேரத்திற்குள் மலையில் ஏறி, இறங்க முடியாது. மேலும், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்க வேண்டும். மேலும், நியாயமான அளவிலான விளக்கில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்" எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details