தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீஸ் கமிஷ்னர் அலுவலக தூய்மைப் பணியாளர்கள் ஊதிய விவகாரம்; உயர் அதிகாரிகளுக்கு வாரண்ட் எச்சரிக்கை! - Commissioner office sanitation wage - COMMISSIONER OFFICE SANITATION WAGE

Sanitation workers: காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவு படி திருத்திய ஊதிய உயர்வை அறிவிக்காவிட்டால், தமிழக உள்துறைச் செயலாளராக இருந்த அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Police
காவல் உயர் அதிகாரிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 10:02 PM IST

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றிய 1,149 பேரின் பணியை வரன்முறை செய்து 1,300 முதல் 3,000 ரூபாய் வரை ஊதியம் நிர்ணயித்து 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், சேலம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு 2,550 முதல் 3,200 ரூபாய் ஊதியம் நிர்ணயித்து 2006ஆம் ஆண்டே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, தங்களுக்கும் சேலம் காவல் துறையில் பணியாற்றியவர்களுக்கு இணையாக ஊதியம் நிர்ணயிக்கக் கோரி கொண்டம்மாள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சேலம் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இணையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் 2,550 முதல் 3,200 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்க வேண்டுமென 2013ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், இரு நீதிபதிகள் அமர்வும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்திவிட்டால், வாரண்ட் எதுவும் பிறப்பிக்க அவசியமில்லை எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:10 தனிப்படை அமைத்தும் முடியல.. ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details