தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலை பதிவாளர் நியமனம் விவகாரம்; சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - anna university registrar posting - ANNA UNIVERSITY REGISTRAR POSTING

Anna University Registrar issue: அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் நியமனத்தை எதிர்த்து சிண்டிகேட் உறுப்பினரும், திமுக எம்எல்ஏவுமான பரந்தாமன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Anna University Registrar Issue
Anna University Registrar Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 6:53 PM IST

சென்னை:திமுக எம்எல்ஏ பரந்தாமன் தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த பதிவாளர் பதவியை நிரப்புவது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், பதிவாளராக டாக்டர் பிரகாஷ் என்பவரை நியமிக்க, பல்கலைக்கழக துணைவேந்தர் கருத்துருவை முன் வைத்தார்.

இதற்கு சிண்டிகேட் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காலியிடம் குறித்து விரிவான விளம்பரம் அளித்த பிறகு நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சிண்டிகேட்டின் அடுத்த கூட்டத்தில், பிரகாஷை பதிவாளராக நியமிப்பது தொடர்பான கருத்துருவை துணைவேந்தர் மீண்டும் கொண்டு வந்தவுடன், அவரை நியமித்து உத்தரவிட்டார்.

சிண்டிகேட்டின் 13 உறுப்பினர்களில் 9 பேர் பிரகாஷை பதிவாளராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் திருத்தம் செய்து, ஆறு உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறி பிரகாஷ்-ஐ நியமித்தது பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது என்பதால், அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், இரு சிண்டிகேட் கூட்டத்தின் வீடியோக்களை பத்திரப்படுத்தும்படி, பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தருமபுரியில் விட்டதை பிடிக்க முயலும் பாமக.. தக்க வைக்குமா திமுக? - ரேஸில் முந்துவது யார்? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details