சென்னை:தமிழகத்தில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் தூய்மைப் பணி, உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பழமையான பாரம்பரியமிக்க கோயில்களில் தூய்மைப் பணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான வழக்கறிஞர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி, கோயில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பதால், பல பாரம்பரியமான கோயில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் திருக்கருங்குடி நாதர் கோயில், மருதநல்லூர், கும்பகோணம் கோயில், தெப்பக்குளங்கள், மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் கொடுக்கப்பட்டன. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் சுய விருப்பத்தில் பங்கேற்கும் வகையில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல், இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள 267 பாடல் பெற்ற ஸ்தலம், 183 வைபவ ஸ்தலம், 84 வைணவ ஸ்தலங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து, மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட துணை நீதிபதிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, அது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகள் அனைத்தையும் 2 வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; தீட்சிதர் குழுவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!